'திருமுழுக்காட்டு ஆகிவிட்டதா? அடடா! என்றும் திருமுழுக்காட்டு காண வந்துவிடுவேனே. இன்று திருத்துழாய் சிறிது குறைந்தது என்று இரண்டாவது முறை சென்றுப் பறித்து வந்து மாலையைத் தொடுத்ததால் சற்று நேரமாகிவிட்டது பட்டரே. எப்படியோ பெருமானை வெகு நேரம் காக்க வைக்காமல் நேரத்திற்கு வந்தேனே. இதோ மலர் மாலைகளும் திருத்துழாய் மாலைகளும். ஆலிலைப்பள்ளியானுக்குச் சாற்றுங்கள்'.
'விட்டுசித்தரே. திருமுழுக்காட்டு நடக்கும் போதெல்லாம் எம்பெருமான் திருமுகமண்டலத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிது நேரமாக அவன் திருமுகத்தில் வாட்டம் தெரிவதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. தேவரீர் கொஞ்சம் பார்த்துச் சொல்ல வேண்டும்'.
'ஆமாம் பட்டரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றுகிறது. தாங்கள் நேற்று சூட்டிய திருத்துழாயைக் களைந்து வெகு நேரம் ஆகிவிட்டதா என்ன?'
'இல்லை விட்டுசித்தரே. சிறிதே நேரம் தான் ஆகியது. நமக்குத் தான் திருமாலவன் திருவிடம் மட்டுமின்றி திருத்துழாயிடமும் மால் கொண்டவன் என்று தெரியுமே. திருமுழுக்காட்டின் போதும் திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம். புதிய ஆடையை இப்போது தான் அணிவித்தேன். அதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள். எம்பெருமானால் அந்த சிறிது நேரத்திற்குக் கூட திருத்துழாயைப் பிரிந்து இருக்க முடியவில்லையா? வியப்பு தான்'.
'பட்டரே. காலம் தாழ்த்தாமல் எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையைச் சூட்டுங்கள். அவன் திருமுகம் மேகம் சூழ்ந்த நிலவு போல் இருப்பதைக் காண இயலவில்லை'.
'இதோ சூட்டிவிட்டேன் பெருமானே. கொஞ்சம் பொறுத்தருளுங்கள்'.
'வடபெருங்கோயிலுடையானே. இதென்ன விந்தை?! திருத்துழாயை அணிந்த பின்னும் உன் திருமுகவாட்டம் மறையவில்லையே. பட்டரே. அனைத்து மலர்மாலைகளையும் சூட்டுங்கள். மாலவன் மனம் அப்போதாவது குளிர்கிறதா பார்ப்போம்'.
'இதோ சூட்டிவிட்டேன் பட்டர்பிரானே. இதோ சூட்டிவிட்டேன்'.
'என்ன விந்தை இது? திருத்துழாயை அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மலர்மாலைகளைச் சூட்டியவுடன் மாறிவிட்டதே. என்ன வியப்பு? ஆகா. இப்போது சுவாமியின் திருமுகம் முழு மதியைப் போல் விளங்குகிறதே. ஆயிரம் கண் போதாதே. ஆயிரம் கண் போதாதே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு'.
'ஆமாம் விட்டுசித்தரே. உண்மை தான். மாயவன் மிகுந்த மாயைகள் புரிகிறான். திருத்துழாய் அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மற்ற மலர் மாலைகளைச் சூட்டியதும் மாறிவிட்டதே. வியப்பிது காண்.'
***
விஷ்ணுசித்தரும் மற்றவர்களும் எம்பெருமானைப் பணிந்து இல்லம் திரும்புகின்றனர். இதே போல பல நாட்கள் கோதை சூட்டிக் கொடுத்த மலர்மாலைகளை அணிந்து கோவிந்தன் மன மகிழ்ந்து அடியவர்களுக்கு அருள் சொரிந்து கொண்டிருக்கிறான். அவனின் திருமுக மணடலத்தில் தோன்றும் பெருமகிழ்ச்சியையும் அவன் கரியவாய திருக்கண்களையும் காண வேண்டுமா? இதோ...

***
அருஞ்சொற்பொருள்:
பட்டர்பிரான் - பாண்டியன் சபையில் பரம்பொருளை அறுதியிட்டுக் கூறியதற்காக பாண்டியன் அவையில் பெரியாழ்வாருக்குக் கொடுக்கப் பட்ட பட்டம். பட்டர்பிரான் திருக்கதையைப் படிக்க 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவைப் பாருங்கள்.
திருமுழுக்காட்டு - அபிஷேகத்திற்கான தமிழ்ச்சொல். வைணவர்கள் அன்று முதல் இன்று வரை அபிஷேகத்திற்குச் சொல்லும் சொல்.
பீதகவாடை - மஞ்சள் ஆடை. பீதாம்பரம் என்று வடமொழியில் சொல்லப்படுவது.
திருத்துழாய் - துளசி.
பட்டர் - அர்ச்சகர். பெருமாள் கோயில் அர்ச்சகரை பட்டர் என்றும் பட்டாச்சாரியர் என்றும் அழைப்பார்கள்.
ஆலிலைப்பள்ளியான் - எல்லா உலகங்களும் தோன்றும் முன் ஒரு குழந்தை வடிவில் ஆலிலை மேல் பள்ளி கொள்வான் பரந்தாமன். அதனால் அவனுக்கு ஆலிலைப்பள்ளியான் என்று பெயர். அது வடமொழியில் வ்டபத்ரசாயி என்று பெயர்ப்பாகும். அதுவே வில்லிபுத்தூரில் வாழும் இறைவனின் திருப்பெயர்.
விட்டுசித்தர் - விஷ்ணு சித்தர் என்னும் திருப்பெயர் தமிழில் விட்டுசித்தர் ஆகிவிடுகிறது. பெரியாழ்வாரே தன் பாடல்களில் தன்னை விட்டுசித்தன் என்றே குறித்துக் கொள்கிறார். விஷ்ணு சித்தன் பெயர் விளக்கம் 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவில் காண்க.
திருமுகமண்டலம் - இறைவனின் முகம். இறைவனையும் அடியார்களையும் சேர்ந்த எதனையும் திரு என்ற அடைமொழியுடன் சொல்வது வைணவ மரபு.
தேவரீர் - தெய்வத்திற்கு சமமான தாங்கள். பெரியவர்களையும் மதிக்கத் தகுந்தவர்களையும் வைணவர் அழைக்கும் சொல்.
அடியேன் - தன்னைக் குறித்துக் கொள்ள வைணவர் சொல்லும் சொல். ஒருவர் மாற்றி ஒருவர் அடியேன் என்று சொல்லிக் கொண்டு பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
மால் - மயக்கம்; திருமால் - திருவிடம் மயங்கியவன்; மயக்குபவன்.
வடபெருங்கோயிலுடையான் - வில்லிபுத்தூர் பெருமானின் திருப்பெயர்.
முடிந்தவரை கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணும் சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனால் பதிவைப் படிக்கும் போது ஏதாவது சொல் புரியவில்லை என்றால் பதிவின் இறுதியில் பாருங்கள். பெரும்பாலும் அந்த சொற்களுக்குப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி அடியேன் ஏதேனும் சொல்லுக்குப் பொருள் சொல்லாமல் விட்டிருந்தால் கேளுங்கள். அவற்றையும் பட்டியலில் பொருளுடன் சேர்த்துவிடுகிறேன்.







