
'அப்பா. நன்கு சொன்னீர்கள். பாவை நோன்பு நோற்று கண்ணனை கோபியர் அடைந்ததைப் போல் அடியேனும் அவன் அருள் பெற ஒரு நல்ல வழி காட்டினீர்கள். பக்தியால் மட்டுமே வசப்படுபவன் அவன். அவனை நோற்றுத் தான் அடைய முடியும். அந்த நோன்பினை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அப்பா'.
'கோதை. நீ சொல்வது உண்மை தான் அம்மா. பக்தியுடையவர்களுக்கு எளியவன் கண்ணன்; மற்றவர்களுக்கு அரியவன். இந்த பாவை நோன்பினை நோற்கும் முறையினைச் சொல்கிறேன் கேள்.
மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான் கீதாசார்யன். அந்தப் புனிதமான மார்கழி மாதம் முழுக்க கடைபிடிக்க வேண்டிய நோன்பு இது'.
'மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் சொல்லும் அளவிற்கு உயர்ந்ததா மார்கழி? அதன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா'.
'நல்ல கேள்வி கேட்டாய் மகளே. ஒரு நாளில் எல்லா காலங்களும் நல்ல காலம் என்பதைப் போல் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறந்தவையே. ஒரு நாளில் எல்லா நேரமும் நல்ல நேரம் ஆனாலும் இறை வழிபாட்டிற்கு பகலவன் உதிப்பதற்கு முன் இருக்கும் ஐந்து நாழிகைகளும் (இரண்டு மணி நேரம்) (காலை 4 முதல் 6 வரை) மாலை கதிரவன் மறையும் நேரத்தை ஒட்டிய ஐந்து நாழிகைகளும் (மாலை 6 முதல் 8 வரை) ஏற்றவை என்பது உலக வழக்கு. மற்ற நேரங்களை விட அந்த நேரத்தில் மனம் இறைவழிபாட்டில் ஒன்று படுவதை நன்கு காணலாம். அந்த இரண்டு நேரங்களிலும் அதிகாலை நேரம் மிக உயர்ந்தது. அந்த நேரத்திற்கு பிரம்ம முஹூர்த்தம் என்றே பெரியோர் பெயர் இட்டிருக்கின்றனர். அந்த அதிகாலை நேரத்தில் இறை வழிபாடு செய்தல் மிக மிக உகந்தது.
காலக் கணக்கில் நம் ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களின் பகல்; ஆடி தொடங்கி மார்கழி வரை அவர்களின் இரவு. ஆக மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம்; ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். தேவர்களுக்குப் புனிதமான இந்த காலங்களில் இறைவழிபாடு செய்தால் மனிதர்களுக்கும் நலம் என்பதால் அவ்விரண்டு மாதங்களையும் தெய்வ வழிபாட்டிற்காக என்று சிறப்பாக வைத்தார்கள் நம் முன்னோர்.
மார்கழி, ஆடி இவ்விரண்டு மாதங்களிலும் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் மிகச் சிறப்பானது. ஒரு குழுவில் எதுவெல்லாம் சிறப்பானவையோ அவற்றை எல்லாம் தன் வடிவாக கண்ணன் கீதையில் சொல்லிக் கொண்டு வரும் போது தான் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான். இப்போது மார்கழியின் பெருமை புரிந்திருக்குமே'.
'புரிந்தது அப்பா. இனி நோன்பு செய்யும் முறையைச் சொல்லுங்கள்'.
'அம்மா. மறந்தும் புறந்தொழாத நாம் இந்த நோன்பையும் கண்ணனை முன்னிட்டே செய்ய வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில் பகலவன் தோன்றுவதற்கு முன் எழுந்து நன்னீராடி தூய உடை அணிந்து கொண்டு இறைவன் நாமங்களைப் பாடி பாவை நோன்பு நோற்பதற்கு ஏற்பட்டுள்ள பாவைக்களத்திற்குச் சென்று அவன் திருவருளை எண்ணி வணங்க வேண்டும். இந்த நோன்பை தனியாக செய்தாலே சிறப்பு தான். ஆனால் அனைவரும் கூடியிருந்து இந்த நோன்பை நோற்றால் இன்னும் மிகச் சிறப்பு. அதிலும் ஒத்த எண்ணமுடையவர்கள் சேர்ந்து செய்தால் இன்னும் பல மடங்கு சிறப்பு'
'அப்பா. நீங்கள் சொன்ன படியே இந்த நோன்பை நோற்கிறேன். நான் மட்டும் இன்றி என் தோழியர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் எல்லோருமே இந்த நோன்பை நோற்கிறோம் அப்பா'
'அப்படியே செய்வாய் மகளே. மாயவன் திருவருள் முன்னின்று காக்கட்டும்'.